தமிழக-கேரள எல்லையில் போலீசார் திடீர் சோதனை


தமிழக-கேரள எல்லையில் போலீசார் திடீர் சோதனை
x

போதைப்பொருள் கடத்தலை தடுக்க இருமாநில எல்லையில் தமிழக-கேரள போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

போதைப்பொருள் கடத்தலை தடுக்க இருமாநில எல்லையில் தமிழக-கேரள போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இருமாநில எல்லையில் சோதனை

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் களியக்காவிளை எல்லையில் இருமாநில போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா தியாவையா ஆகியோர் தலைமையில் இருமாநில எல்லை பகுதிகளில் உள்ள கூரியர் சர்வீஸ் நிறுவனம், மருந்து கடைகளில் ஆய்வு நடந்தது.

விழிப்புணர்வு

பின்னர் எல்லை பகுதியில் உள்ள ஆட்டோ, கார் உள்பட வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அந்த பகுதியில் விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.

போதைப்பொருள் கடத்தல் பற்றிய குற்றவாளிகளை அடையாளம் காட்டும் விதமாக கேரள போலீசாரை தொடர்பு கொள்ள 9995966666 என்ற எண்ணையும், தமிழக போலீசாைர தொடர்பு கொள்ள 7010363173 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

மேலும் இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் போதைப் பொருட்களை தடுக்க பல்வேறு நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போதை பழக்கத்தை கட்டுப்படுத்த கேரளாவில் உள்ள குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் உள்ள குற்றவாளிகள் குறித்த பட்டியல் கேரளா காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மாநிலம் விட்டு மாநிலம் எங்கு சென்றாலும் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார்கள். கூரியர் சர்வீஸ் மூலம் போதைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய திட்டம்

திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா தியாவையா நிருபர்களிடம் கூறுகையில், தமிழக-கேரள எல்லை பகுதிகளை கேரளா போலீசார் ஏற்கனவே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் தமிழக போலீசாருடன் இணைந்து போதைப்பொருட்கள் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எல்லை பகுதிகளில் போதைப்பொருட்கள் கடத்தல் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் கல்வித்துறை, காவல்துறை மற்றும் அரசு துறைகள் இணைந்து போதைப்பொருட்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இணைந்து செயல்பட கேரள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றார்.

அப்போது தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், நெய்யாற்றின்கரை துணை சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், களியக்காவிளை இன்ஸ்பெக்டர் காளியப்பன், பாறசாலை இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story