டிராக்டர் டிரைவர் கொலையில் சரண் அடைந்த 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
தேன்கனிக்கோட்டை
தளி அருகே டிராக்டர் டிரைவர் கொலையில் சரண் அடைந்த 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
டிராக்டர் டிரைவர் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கும்ளாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). டிராக்டர் டிரைவர். இவருக்கும், அவரது பெரியப்பா மகன் கோட்டப்பா (40) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 18-ந் தேதி கோட்டப்பா தனது கூட்டாளிகளுடன் ரமேசை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தார்.
அதை தடுக்க சென்ற ரமேசின் மனைவி மற்றும் மகனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் கொலை தொடர்பாக டி.தம்மண்டரப்பள்ளியை சேர்ந்த நவீன்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் காவலில் விசாரணை
மேலும் கும்ளாபுரத்தை சேர்ந்த கோட்டப்பா, சம்பத் (30) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க தளி போலீசார் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து கோட்டப்பா, சம்பத் ஆகிய 2 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பிறகு அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கர்நாடக மாநிலம் என்.கொல்லஅள்ளியை சேர்ந்த ஹரீஷ் (31) என்பவரை தளி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.