கவர்னர் மாளிகை புகாருக்கு போலீஸ் டி.ஜி.பி. மறுப்பு: நியாயமான விசாரணை நடைபெறுவதாக விளக்கம்


கவர்னர் மாளிகை புகாருக்கு போலீஸ் டி.ஜி.பி. மறுப்பு: நியாயமான விசாரணை நடைபெறுவதாக விளக்கம்
x

கவர்னர் மாளிகை மீது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் கூறப்பட்டது. இது உண்மைக்கு புறம்பானது, நியாயமான விசாரணை நடைபெறுகிறது என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1-வது நுழைவுவாயில் முன் நேற்று முன்தினம் மதியம் 'திடீர்' என்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் அடைப்பு

இதுதொடர்பாக பழைய குற்றவாளி கருக்கா வினோத் (வயது 42) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.

அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

போலீஸ் கமிஷனர் சந்திப்பு

கைதான கருக்கா வினோத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் மாளிகை சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதனால் கவர்னர் ஆர்.என். ரவி அதிருப்தி அடைந்து இருக் கிறார். இதுதொடர்பாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அளிக்கவும் அவர் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று காலை 10.30 மணி அளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பதிவு செய்யப்பட்டு இருக்கும் வழக்கு குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் கவர்னரிடம் அப்போது அவர் விளக்கம் கூறினார்.

இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மறுத்துள்ளார்.

பரபரப்பு பதிவு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நுழைவுவாயில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜ்பவன் சார்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், கவர்னர் மாளிகை மீது பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு களை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். உஷாராக இருந்த போலீசார் தடுத்ததால் 2 பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு கவர்னர் மாளிகையின் துணை செயலாளர் செங்கோட்டையன் புகார் மனு அளித்தார். அதில், கவர்னர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி கவர்னர் தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த போது கற்கள் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக ராஜ்பவன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கவர்னரின் உயிருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. கவர்னர் மாளிகையின் இந்த குற்றச்சாட்டுகளை போலீசார் மறுத்துள்ளனர்.

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம்

இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் அளித்து 3 பக்கத்தில் நேற்றிரவு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

25-ந்தேதி அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (வயது 42) (தேனாம்பேட்டை போலீஸ்நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) சர்தார் படேல் சாலை வழியாக கவர்னர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய 4 பாட்டில்களைக் கொண்டு வந்து, அவற்றை கவர்னர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டார்.

அப்போது கவர்னர் மாளிகை வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழக போலீசாரால் தடுக்கப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்திலிருந்து 2 பாட்டில்களை வீசினார். அவை கவர்னர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு (பேரிகார்டு) அருகே விழுந்தது. பின்னர், அவர் கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில், பாதுகாப்பு போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பின்னர், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, 25-ந்தேதி அன்று கிண்டி போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அவர் 9.11.2023 வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேற்படி வினோத் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் சவுத் போக் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் 12.8.2015 அன்று பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர். அதேபோல் 13.7.2017 அன்று வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் மண் எண்ணெய் நிரம்பிய பாட்டில்களை வீச முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உண்மைக்கு புறம்பானது

கவர்னருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறு பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு 25-ந்தேதி அன்று டி.செங்கோட்டையன் (கவர்னரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.

25-ந்தேதி அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் கவர்னர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி கவர்னர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு கவர்னர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

நியாயமான விசாரணை

அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது கவர்னரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. கவர்னரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் கவர்னரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.

மேலும் கவர்னர் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. கவர்னர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் குற்றவாளி கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும்.

கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு போலீஸ் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.


Next Story