மேற்கு வங்க பெண்ணுக்கு ரத்ததானம் அளித்த போலீசார்
மேற்கு வங்க பெண்ணுக்கு ரத்ததானம் அளித்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுமிதாமோண்டல். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் ரத்தம் தேவைப்பட்டது. இவரின் மகள் தனுஸ்ரீ, தாயாரின் அறுவை சிகிச்சைக்காக ரத்தம் பெற முயற்சித்தார். எனினும் ரத்தம் கிடைக்கவில்லை. இதனால் அவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனை சந்தித்து தாயாரின் அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தார்.
இதையடுத்து சூப்பிரண்டு, போலீசாரிடம் ரத்தம் தானம் அளிக்க முன்வரலாம் என்று தெரிவித்தார். அதன்படி ஆயுதப்படையில் பணியாற்றும் முதல்நிலை காவலர் நரேந்திரன், பத்மநாபன் ஆகியோர் ரத்த தானம் அளிக்க முன்வந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சுமிதாமோண்டலுக்கு ரத்தம் தானமாக அளித்தனர். தானம் அளித்த இருவரையும் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டினர்.