கஞ்சா கடத்தியதாக சோதனை: போலீஸ் என கூறி விவசாயியிடம் ரூ.43 ஆயிரம் பறிப்பு செஞ்சி அருகே பரபரப்பு


கஞ்சா கடத்தியதாக சோதனை: போலீஸ் என கூறி விவசாயியிடம் ரூ.43 ஆயிரம் பறிப்பு செஞ்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் என கூறி விவசாயியிடம் ரூ.43 ஆயிரம் பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சியை அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 60), விவசாயி. இவர் நேற்று அதிகாலையில் தனது ஆடுகளை செஞ்சியில் நடைபெற்ற வார சந்தையில் விற்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். செஞ்சி விழுப்புரம் சாலை பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் ஜெயராமனை மறித்தார். பின்னர் அவர் தான் போலீஸ் அதிகாரி என்றும், நீங்கள் கஞ்சா கடத்தி செல்கிறீர்கள், உங்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து ஜெயராமன் தான் கஞ்சா கடத்தி வரவில்லை என்றும், ஆடுகளை விற்று வருவதாகவும் கூறி அவர் வைத்திருந்த ரூ.43 ஆயிரத்து 300-யை காண்பித்துள்ளார். இதையடுத்து அந்த நபர், அவர் வைத்திருந்த பணத்தை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். உடனே அவரை ஜெயராமன் விரட்டி சென்றும், பிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story