விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு
வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
போலீஸ் கொடி அணிவகுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், சரவணன், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் பொன்னியம்மன் கோவில் திடலில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவர் வீதி, கச்சேரி ரோடு, அம்பூர் பேட்டை, ஜின்னா ரோடு, காதர்பேட்டை, சி.எல்.ரோடு, முகமது அலி பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பொன்னியம்மன் கோவில் திடலில் முடிவடைந்தது.
பாதுகாப்பு
அங்கு பேசிய வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்கப்படும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட வேண்டும், தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் அன்று பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் இன்றி சிலைகளை எடுத்துச் செல்ல தேவையான பாதுகாப்புகள் வழங்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஊர்வலத்தில் வாணியம்பாடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பழனி, அருண்குமார், ஜெயலட்சுமி, சாந்தி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் உள்பட 250 போலீசார் கலந்து கொண்டனர்.