மீனவர்களிடம் வாடகைக்கு வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட போலீசார்


மீனவர்களிடம் வாடகைக்கு வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட போலீசார்
x

3 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கும் ரோந்து படகுகளால் மீனவர்களிடம் படகுகளை வாடகைக்கு வாங்கி செல்லும்நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அவசர காலங்களில் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை

போலீஸ் நிலையங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதிகளான கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 2 விசைப்படகு மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர். இதேபோல் இந்த கடலோரப் பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன.

இதிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் மீனவர்கள் பாதுகாப்பான முறையில் அரசு விதிமுறைக்கு உட்பட்டு மீன் பிடிக்க ஏதுவாகவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கடல் பகுதியில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் இப்பகுதியில் கடலோர காவல் குழும 3 போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த போலீஸ் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.

வாடகைக்கு வாங்கி செல்லும் நிலை

இவர்கள் கடல் பகுதிகளில் ரோந்து செல்வதற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 அதிநவீன ரோந்து படகுகள் வழங்கப்பட்டன. இந்த ரோந்து படகுகள் மூலம் தினந்தோறும் போலீசார் கடல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது படகு கோளாறு காரணமாக அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தால் அவர்களை மீட்டு வரவும் பயன்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரோந்து படகுகளில் கோளாறு ஏற்பட்டது. அப்போது படகுகளில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மீண்டும் அடிக்கடி படகுகளில் கோளாறு ஏற்பட்டு வந்ததால், தற்போது படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் படகு கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படாமல் கேட்பாரற்று இருந்து வருகிறது. கடலோர காவல் குழுமத்தினருக்கு ரோந்து படகுகள் இல்லாததால், மீனவர்களிடம் வாடகைக்கு படகுகளை வாங்கிச்சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறித்த நேரத்திற்கு அவர்கள் செல்ல முடியவில்லை. ஆகையால் பழுதாகி கிடக்கும் ரோந்து படகுகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story