சென்னையில் போலீஸ் வேட்டை ஒரே வாரத்தில் 56 கிலோ கஞ்சா பறிமுதல்; 31 வியாபாரிகள் கைது
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த போலீஸ் வேட்டையில் 56 கிலோ கஞ்சா, 20 கிலோ கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டு, 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னையில் தினமும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா வியாபாரிகளை வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில், 31 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 56 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 20 கிலோ கஞ்சா கேக்கும் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு முடக்கம்
கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை 749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,650 கஞ்சா வியாபாரிகள் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். 39 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இவர்களில் 839 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகள் மீது இது போன்ற கடும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவித்துள்ளார்.