வீரளூர் ஊராட்சியில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு


வீரளூர் ஊராட்சியில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
x

வீரளூர் ஊராட்சியில் சுடுகாட்டு பாதைக்காக கலவரம் ஏற்பட்ட பகுதியில் தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பிரபாகரன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

வீரளூர் ஊராட்சியில் சுடுகாட்டு பாதைக்காக கலவரம் ஏற்பட்ட பகுதியில் தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பிரபாகரன் ஆய்வு செய்தார்.

சுடுகாட்டு பாதைக்காக கலவரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் இடையே சுடுகாட்டு பாதை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு பின்பு கலவரமாக மாறியது. இது சம்பந்தமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

அதன்பிறகு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த அருந்ததியர் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, சி.என்.அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறினர். அதன் பிறகு ரூ.62 லட்சம் மதிப்பில் நிவாரண உதவித் தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து தற்போது வீரளூர் அருந்ததியே காலனி பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட நிவாரண தொகை போதுமானதாக இல்லை எனவும், முறையாக அனைவருக்கும் வழங்கப்படவில்லை எனவும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து உள்ளனர். இதனையடுத்து கடந்த 4-ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வீரளூர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

போலீஸ் ஐ.ஜி. நேரில் ஆய்வு

இந்த நிலையில் வீரளூர் ஊராட்சியில் நடைபெற்ற கலவர சம்பவம் குறித்து ஆய்வறிக்கையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து முழு அறிக்கையை வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பிரபாகரன் நேற்று வீரளூர் ஊராட்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கலவர சம்பவம் ஏற்படுவதற்கான சுடுகாட்டுப் பாதையை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் உடனிருந்தார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி., கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுடன் ஆய்வு செய்தார்.


Next Story