விவசாயிகள் புகார் எதிரொலி:நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் ஆய்வு
விவசாயிகள் புகார் எதிரொலி காரணமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள், உற்பத்தி செய்யும் நெல்லை நேரடியாக எடுத்துச்சென்று விற்பனை செய்ய ஏதுவாகவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கரீப் பருவத்திற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அறுவடை தொடங்கியது. இதையொட்டி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தில் 46 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
விவசாயிகள் புகார்
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதில்லை என்றும் எடை போடுவதில் குளறுபடி செய்வதாகவும், அதுமட்டுமில்லாமல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கூடுதலாக கேட்பதாகவும் விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டினர்.
கடந்த மாதம் 23-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும், இதுதொடர்பாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்து அதிகாரிகளிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் ஆய்வு
இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது விவசாயிகள் கூறியுள்ள புகாரை தொடர்ந்து நேற்று விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் மற்றும் போலீசார் விழுப்புரம் அருகே பெரும்பாக்கம், காணை ஆகிய இடங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் சரியான முறையில் எடை போடப்பட்டு அவை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறதா, அந்நிலையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா? மூட்டைக்கு யாரேனும் பணம் வாங்குகிறார்களா, ஏதேனும் முறைகேடான செயல்கள் நடக்கிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு அங்கிருந்த விவசாயிகளிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள்.