ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருச்சி,
திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவர் விமானநிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு இவரது ஆலையில் பணிபுரிந்த முனியன் என்பவரை செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியனின் மனைவி ரம்யா திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் செல்லையா மீது புகார் அளித்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அப்போதைய விமானநிலைய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் அரிசி ஆலை அதிபர் செல்லையாவிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். முருகேசன் தற்போது திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்து இருந்தார். அப்போது இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.