4 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


4 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
x

அரசு டாக்டரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 4 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் உதயக்குமார் (வயது 55). பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி ரேவதி. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் படித்து வரும் மகளை பார்க்க ரேவதி சென்றுவிட்டார். இதனால் உதயக்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் உதயக்குமார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்தனர். பின்னர் உதயக்குமாரை எழுப்பி அவரை கத்தியால் குத்தினர். தொடர்ந்து அவரை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றனர்.

பொதுமக்களை பீதி அடைய செய்யும் வகையில் நடந்த இந்த சம்பவம் குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் உதயக்குமார் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க்கை கொள்ளையர்கள் திருடி சென்றதால், அக்கம்பக்கத்தில் உள்ள வீடு, கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சந்தேகப்படும்படி யாரேனும் வந்து செல்கிறார்களா? என பார்வையிட்டு வருகின்றனர்.


Next Story