நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் 7 பேரிடம் போலீசார் விசாரணை


நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில்  7 பேரிடம் போலீசார் விசாரணை
x

நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் போலீசார் 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரின் மகன் ஜெகன் (வயது 34). நெல்லை மாநகர பா.ஜனதா இளைஞரணி செயலாளர். திருமணம் ஆகாதவர். நெல்லை கே.டி.சி. நகரில் வசித்து வந்தார். நேற்றுஇரவு ஜெகன் தனது மொபட்டில் மூளிக்குளத்திற்கு வந்தார். அங்கு உள்ள ஒரு கோவில் முன்பு வாய்க்கால் கரையோரம் மொபட்டை நிறுத்திவிட்டு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தொடர்ந்து இந்த கொலை முன்பகை காரணமாக நடந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் இன்று காலையில் மூளிக்குளம் பகுதியில் ஜெகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜனதாவினர் திரண்டனர். அவர்கள் தி.மு.க. நிர்வாகி பிரபு தூண்டுதலின்பேரில் தான் இந்த கொலை நடந்து உள்ளது. எனவே முக்கிய குற்றவாளிகளான பிரபுவையும், அவரின் மனைவி மற்றும் உறவினரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வண்ணார்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட் செல்லும் திருச்செந்தூர் சாலையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் சிலரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் வேனில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இதற்கிடையே பாளையங்கோட்டை போலீசார் ஜெகன் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story