சேலத்தில் விறகு கட்டையால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு-கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
சேலத்தில் விறகு கட்டையால் தாக்கப்பட்ட வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விறகு கட்டையால் தாக்குதல்
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கடந்த 17-ந் தேதி இரவு நண்பர்களுடன் ஓந்தாபிள்ளை காடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதனிடையே அந்த வழியாக சன்னியாசிகுண்டு மூவேந்தர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயக்குமார் (வயது 28) என்பவர் வந்தார். இவர் தினேஷ்குமார் தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றார்.
அப்போது அருகில் கிடந்த விறகு கட்டையால் ஜெயக்குமார் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கொலை வழக்காக மாற்றம்
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விறகு கட்டையால் தாக்கி ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.