நெல்லையில் போலீசார் விசாரணை


நெல்லையில் போலீசார் விசாரணை
x

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை, ஏர்வாடியில் போலீசார் விசாரணை நடத்தினர்

திருநெல்வேலி

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை, ஏர்வாடியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவை கார் வெடிப்பு

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் என்ற நபர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலப்பாளையத்தில் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையம் மாட்டு சந்தைக்கு எதிரே உள்ள பகுதியில் வசித்து வரும் முகமதுஉசேன் என்பவரின் வீட்டிற்கு தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், ஜேம்சன் ஜெபராஜ் மற்றும் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று திடீரென்று சென்றனர்.

அங்கு வைத்து முகமது உசேன் (வயது 45) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 4.30 மணிவரை வரை நடந்தது.

இந்த விசாரணையின்போது வெடி பொருட்கள் ஏதும் வீட்டில் இருக்கிறதா? என்பதை கண்டறியவும், அவ்வாறு இருந்தால் அதை செயல் இழக்க செய்வதற்காகவும் ''எக்ஸ்புளோசிவ்' என்ற தடுப்பு வாகனத்தையும் போலீசார் கொண்டு வந்திருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

முகமது உசேன் ஏற்கனவே கோவையில் இருந்துள்ளார். தற்போது அவர் இஸ்லாமிய பிரசார பேரவை அமைப்பின் நிர்வாகியாகவும், மேலப்பாளையத்தில் டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையொட்டி மேலப்பாளையம் பகுதியில் நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, இந்த விசாரணை குறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

ஏர்வாடி

முன்னதாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இஸ்லாமிய பிரசார பேரவை நிர்வாகி அப்துல் காதர் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story