ராமநத்தம் அருகே சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர் போலீசார் விசாரணை
ராமநத்தம் அருகே சாலையோரம் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள லெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சாமிநாதன் (வயது 33). இவர் நேற்று லெக்கூர் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமிநாதன் உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு குளிர்பானம், விஷபாட்டில் மற்றும் தின்பண்டங்கள் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விழுப்புரத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.