கெடார் அருகே வங்கி உதவி மேலாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கெடார் அருகே வங்கி உதவி மேலாளர் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கெடார்,
விழுப்புரம் அடுத்த கெடார் அருகே உள்ள சிறுவாலை என்ற ஊரை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகன் பாபு(வயது 31). இவர் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் விடுமுறைக்காக பாபு செஞ்சியில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 28-ந்தேதி பாபு மற்றும் அவருடைய தாய் சீதா ஆகியோர் செஞ்சியில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவும் திறந்து கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பாபு, பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 5 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
ரூ.2 லட்சம் கொள்ளை
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் ஓட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வந்து, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.