பரங்கிப்பேட்டையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பரங்கிப்பேட்டையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை தோணிதுறை தெருவை சேர்ந்தவர் தேவகண்ணு (வயது 42). இவர் பரங்கிப்பேட்டை துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தேவகண்ணு கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் குடும்பத்துடன் தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து பதறிய தேவகண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

ரூ.6 லட்சம்

மேலும் பீரோவில் வைத்திருந்த 14½ பவுன் நகைகள், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைப்போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவகண்ணு, பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story