2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி
தேனி வீரபாண்டியில் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக போலீஸ் துறையில் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார், 'காக்கி உதவும் கரங்கள்' என்ற பெயரில் குழுவாக இணைந்து, பணியின் போது உயிரிழக்கும் சக போலீசார் மற்றும் உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போலீசாருக்கு தங்களுக்குள் நிதி திரட்டி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பணியின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு என மொத்தம் 27 பேருக்கு சுமார் ரூ.4 கோடியே 12 லட்சம் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 2011-ம் ஆண்டு பேட்ஜ் போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர். அதன்படி வீரபாண்டியில் உள்ள போலீஸ் சமுதாயக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் 123 போலீசார் பங்கேற்றனர். ஆண்கள் ஒரே நிறத்தில் வேட்டி, சட்டையும், பெண் போலீசார் ஒரே மாதிரியான பட்டுச்சேலை அணிந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் போலீசார் தங்களின் பணி அனுபவங்கள், பணியாற்றிய இடங்கள் போன்ற விவரங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான செந்தமிழ்செல்வன், தங்கமுனியாண்டி, கதிரவன், ராஜேஷ்கண்ணன், பாண்டீஸ்வரி, நதியா ஆகியோர் செய்திருந்தனர்.