தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியால், தமிழக-கேரள எல்லையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்,
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியால், தமிழக-கேரள எல்லையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் கடந்த 22-ந் தேதி சென்னை, கோவை உள்பட பல இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு தரப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எல்லைகளில் கண்காணிப்பு
இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர். ஒரு பஸ்சில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்
இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வருகிற 30-ந் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது என்றனர்.