கன்டெய்னரை திறந்து போலீசார் விசாரணை
விவசாய நிலத்தில் கேட்பாரற்று கிடந்த கன்டெய்னரை திறந்து போலீசார் விசாரணை நடத்தினா்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த ஏவலூர் கிராம எல்லைப் பகுதியில் விவசாய நிலத்தில் கடந்த சில மாதங்களாக கன்டெய்னர் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த கன்டெய்னர் யாருடையது என்பது தெரியவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விவசாய சங்கம் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்குவாரி அமைக்கும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிக்காக கன்டெய்னர் கொண்டு வரப்பட்டதா?, அந்த கன்டெய்னரில் கல்குவாரி அமைப்பதற்கு தேவையான வெடிபொருட்கள் உள்ளதா? என அப்பகுதி மக்கள் சந்தேகித்தனர். இது பற்றி அறிந்ததும் ரோசணை இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கன்டெய்னர், ஒப்பந்ததாரர்களான குமார், வெங்கடேசன், ராஜா உள்பட 5 பேருக்கு சொந்தமானது என்பதும், சாலை மற்றும் வீடு கட்டுமான பணிக்காக சிமெண்டு மூட்டைகள் கொண்டு வருவதற்காக கன்டெய்னரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கன்டெய்னரை போலீசார் திறந்து பார்த்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.