பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் ரோந்து


பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் ரோந்து
x

பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க 60 வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

வேலூர்

பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க 60 வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

28 ரவுடிகள் கைது

பொங்கல் பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்கள், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது. இதில், 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

29 ரவுடிகள் மீது 110 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உதவி கலெக்டர் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு நன்னடத்தைக்கான பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளது. மேலும் 63 ரவுடிகள் மீது வழக்கு பதியப்பட்டு பிணை ஆவணம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

60 வாகனங்களில் ரோந்து பணி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ரெயில் நிலையம், பஸ்நிலையம், சுங்கச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை, பூங்காக்கள், பஜார், கடைவீதிகள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் திருட்டை தடுக்க போலீசார் மாற்று உடையில் கண்காணித்து வருகின்றனர்.

அதிகம் விபத்துகள் நிகழும் 26 இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் நடைபெறும் பொங்கல் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க 60 ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகை பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story