கோவில் திருவிழாவை நடத்த போலீஸ் அனுமதி அவசியம் இல்லை


கோவில் திருவிழாவை நடத்த போலீஸ் அனுமதி அவசியம் இல்லை
x

கோவில் திருவிழாவை நடத்த போலீஸ் அனுமதி அவசியம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

கோவில் திருவிழாவை நடத்த போலீஸ் அனுமதி அவசியம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோவில் விழாவுக்கு அனுமதி கோரி மனு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வலையபட்டியை சேர்ந்த சீனி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ராஜகாளி அம்மன் கோவில், பட்டத்து அரசி அம்மன் கோவில் ஆகியவற்றின் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இன்றி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அந்த கோவில்களில் வருகிற 19, 20-ந்தேதிகளில் பொங்கல் திருவிழாவை நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருவிழாவையொட்டி உரிய பாதுகாப்பை வழங்கும்படி போலீசாரிடம் மனு அளித்து உள்ளோம். இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, திருவிழா நடத்த உரிய அனுமதியை அளிக்க திருச்சுழி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

உணர்வுடன் கலந்துள்ளன

கிராமங்களில் பழமையான கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு போலீசில் அனுமதி பெற வேண்டும் என்று சட்ட விதிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதிலாக கிடைத்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. அந்த வகையில் அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் ஆயுதம் ஏதுமின்றி ஒன்றுகூடுவதற்கு உரிமை உண்டு என சட்டப்பிரிவு 19 (1) (பி) கூறுகிறது.

அதேபோல மற்றொரு சட்டப்பிரிவு 25 (1) விதிகளுக்கு உட்பட்டு, சுதந்திரமாக மதத்தை கடைப்பிடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு சம உரிமை உண்டு என்கிறது. இதுபோன்ற ஒரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, "பல நூற்றாண்டுகளாக உள்ள பழமையான பழக்கவழக்கங்கள் மற்றும் மதநடைமுறைகளை புறக்கணிக்க முடியாது. ஏனெனில் இவை உள்ளூர் மக்களின் உணர்வுடன் கலந்துள்ளன" என்று தெரிவித்துள்ளது.

அவசியம் இல்லை

எனவே கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை இருந்தாலோ, ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றிற்கு மட்டும் போலீசாரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும். இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.

திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story