அசம்பாவித சம்பவங்களை தடுக்க குமரியில் போலீஸ் குவிப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டம் நடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டம் நடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 ஆண்டுகள் தடை
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 முறை சோதனை நடத்தினர். மேலும் அந்த அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த சம்பவத்துக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. குமரி மாவட்டத்திலும் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
1,200 போலீசார்...
இதேபோல குமரி மாவட்டத்திலும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரின் வழக்கமான ரோந்து பணி மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. முக்கிய சந்திப்புகளில் தடுப்பு அமைத்து வாகன சோதனை நடந்தது.
அதோடு அஞ்சுகிராமம், களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, சந்தேகப்படும் படியாக வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுப்பி வைக்கப்பட்டது.
இடலாக்குடியில் போலீஸ் குவிப்பு
நாகர்கோவில் மாநகராட்சியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடலாக்குடி, இளங்கடை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல தக்கலை, திருவிதாங்கோடு, நித்திரவிளை, குளச்சல், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. கடலோர கிராமங்களிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்த முயற்சி
இதற்கிடையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதை கண்டித்து அந்த அமைப்பு சார்பில் நேற்று காலை திருவிதாங்கோட்டில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் தக்கலை துணை சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் ஏராளமான போலீசார் நேற்று காலையில் இருந்தே குவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைப்பினர் ஒவ்வொருவராக வர தொடங்கினர். அந்த வகையில் போராட்டம் நடத்த முயன்றதாக அமைப் பின் தக்கலை வட்டார தலைவர் ஷெரிப் உள்பட 6 பேரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
வீடுகளுக்கு பாதுகாப்பு
மேலும் பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோரது வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.