போலீசார் அதிரடி சோதனை: 580 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது
மதுரை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் 580 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் 580 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் பெருங்குடி போலீஸ் எல்லைக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் ஊமச்சிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த ஒரு கும்பல், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பெருமாள் நகரைச் சேர்ந்த கருப்பசாமி (வயது22), காளீஸ்வரன் (22), லட்சுமணன் (20), லிங்க பெருமாள் (27), அஜித் குமார் என்ற சேதுபதி (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த வழியாக வருபவர்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட காத்திருந்ததாகவும், போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
5 பேர் கைது
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில் 580 போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு பெரிய வாள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் இது போன்று திருட்டு, வழிப்பறி, போதை பொருள் விற்பனை செய்தல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.