ஜாமீனில் வந்து காதலியின் தாயை மிரட்டியதால் போலீசார் வலைவீச்சு
மயிலாடுதுறையில், காதலியை கடத்திய வழக்கில் ஜெயிலுக்கு சென்றவர், ஜாமீனில் வந்து அந்த பெண்ணின் தாயை மிரட்டியதால் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்
மயிலாடுதுறையில், காதலியை கடத்திய வழக்கில் ஜெயிலுக்கு சென்றவர், ஜாமீனில் வந்து அந்த பெண்ணின் தாயை மிரட்டியதால் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
காதல்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (வயது 34). இவர், மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் அருகில் மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். அதன்பிறகு விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பழகுவதை அந்தப் பெண் நிறுத்திக்கொண்டார்.
கொலை மிரட்டல்
ஆனாலும் விக்னேஸ்வரன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி அந்தப்பெண்ணை விக்னேஸ்வரன் கடத்த முயன்றார். அப்போது அவரிடம் இருந்து தப்பித்த அந்தப்பெண் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக விக்னேஸ்வரன் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடத்தி சென்றனர்
அதன்பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி இரவு ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர், அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை கடத்தி சென்றனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அந்த பெண்ணை மீட்டனர்.,
ஜாமீனில் வந்து மிரட்டல்
இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக விக்னேஸ்வரன் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விக்னேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த விக்னேஸ்வரன் மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணின் தாயாரிடம், என்னை தவிர வேறு யாருக்கும் உனது பெண்ணை திருமணம் செய்து வைக்க கூடாது என்று கூறி மிரட்டியதாக அந்த பெண்ணின் தாயார் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.
வலைவீச்சு
இந்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஸ்வரன் மீது மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.