'அக்னிபத்' திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16-ந்தேதி பீகாரில் 2 ரெயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில்களை மறித்ததோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இந்தநிலையில் தமிழகத்திலும் திருச்சி மாவட்டத்தில் நேற்று 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன், துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான ரெயில்வே போலீசார், மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர், பெரியமேடு, பூக்கடை பகுதி போலீசார் என மொத்தமாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் சென்டிரல் ரெயில் நிலையத்தின் வளாகத்திலும், அதனை சுற்றியும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.