போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்


போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்
x
திருப்பூர்


துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியதாக புகார் தெரிவித்து அரசு ஊழியர்கள் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண் கடத்தல்

இதுகுறித்து அரசு ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது:-

குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மரிக்கந்தை வல்லகுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்.விவசாயி.நேற்று குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்கு சிலருடன் வந்த இவர் விருகல்பட்டி ஊராட்சி பகுதியில் மண் கடத்தல் நடப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாதிக் பாட்ஷாவிடம் புகார் தெரிவித்துள்ளார்.அப்போது ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்காக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் அங்கு வந்துள்ளார்.அப்போது அங்குள்ள இருக்கையில் அமர்ந்த சதீஷ்குமாருடன் அருகிலிருந்த ஸ்ரீதர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அவரை கெட்ட வார்த்தையால் திட்டியும் கைகளால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்ததுடன் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

போராட்டம்

உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீதரை வெளியேற்றியுள்ளனர்.ஒரு அரசு ஊழியரை அலுவலகத்துக்குள்ளேயே தாக்கிய இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது.அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு ஊழியருக்கு பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத நிலையைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடுமலை ஒன்றியம், மடத்துக்குளம் ஒன்றியம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.சம்பவம் குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story