போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் வேல்பாண்டியன் (வயது 42). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலையில் வேல்பாண்டியன் காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறையில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சேர்ந்தமரம் போலீசார் அதிர்ச்சி அடைந்து, உடனே வேல் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேல்பாண்டியன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.