நின்ற ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதல்; அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
இடையக்கோட்டை அருகே நின்ற ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானர்.
திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டை அருகே உள்ள அத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 54). இவர், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர், அத்தப்பன்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இடையக்கோட்டை-திண்டுக்கல் சாலையில் நவாலூத்து ஆதிதிராவிடர் காலனி அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது. அதன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட நல்லுசாமி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நல்லுசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் குமரபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.