மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
தலைவாசல்:-
தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார். மகன் படுகாயம் அடைந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர்
தலைவாசல் அருகே நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது54), இவர், ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு பிரவீன், பிரகதீஸ்வரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சென்னையில் பணிபுரிந்து வரும் பிரவீன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார். தலைவாசல் வந்து இறங்கிய அவர், தன்னை கூப்பிட வருமாறு தந்தைக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். அதன்பேரில் செல்வராசு மோட்டார் சைக்கிளில் தலைவாசலுக்கு வந்து மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 5.30 மணி அளவில் நடுமேடு வழியாக நாவலூர் சென்ற போது பூனை ஒன்று சாலையின் குறுக்கே ஓடியதாக தெரிகிறது.
சாவு
அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் செல்வராசு, அவருடைய மகன் பிரவீன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த செல்வராசு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வராசு பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.