போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி: பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு தொடங்கியது-284 பேர் பங்கேற்பு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி: பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு தொடங்கியது-284 பேர் பங்கேற்பு
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு சேலத்தில் பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 284 பேர் பங்கேற்றனர்.

சேலம்

உடற்தகுதி தேர்வு

தமிழக காவல் துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 2,484 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி பெற்ற சேலம், நாமக்கல் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த 413 பெண்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு நேற்று சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது.

இந்த தேர்வில் 284 பேர் பங்கேற்றனர். 129 பேர் வரவில்லை. தேர்வர்களின் பெயர் சரிபார்க்கப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதையடுத்து டிஜிட்டல் கருவி மூலம் பெண்களுக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

248 பேர் தேர்ச்சி

இந்த தேர்வை போலீஸ் ஐ.ஜி. அருண், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு முழுவதும் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. நேற்று நடந்த தேர்வில் 248 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றும் 77 பெண்களை தவிர மற்றவர்களுக்கு இன்று (புதன்கிழமை) 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story