போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு-7,613 பேர் எழுதுகின்றனர்
சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காட்பாடியில் தேர்வை ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 613 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு பணியில் 900 பேர்
தமிழகம் முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 7,613 பேர் வேலூர் காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எழுதுகின்றனர். இந்த தேர்வு பணியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், அமைச்சுப்பணியாளர்கள் என 900 பேர் ஈடுபட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
வழிமுறைகள்
தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு எழுதுபவர்கள் நீல மற்றும் கருப்பு நிற பந்து முனை பேனாக்களை மட்டும் கொண்டு செல்ல வேண்டும். நுழைவு வாயிலில் சோதனை செய்த பின்னரே அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். செல்போன், மின்னணு பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்பதாரரின் நுழைவு சீட்டில் உள்ள புகைப்படம் அவர்களுடையது தானா என சோதனை செய்யப்படும்.
நுழைவு சீட்டில் புகைப்படம் இல்லை என்றால் புகைப்படத்தை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு முடியும்வரை தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. தேர்வு அறையில் பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் விண்ணப்பதாரர்களின் தேர்வு நிலை ரத்து செய்யப்படும். வீட்டில் இருந்து புறப்படும் முன்பு தேர்வு மையம் எது என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.