பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
காரைக்குடியில் இன்று நடைபெறும் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடியில் இன்று நடைபெறும் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
சப்-இன்ஸ்பெக்டர் பணி
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தால் 444 நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று(சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.. இதையொட்டி இந்த தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4,083 பேர் எழுத உள்ளனர். இந்த நேரடி தேர்வு காரைக்குடியில் 5 இடங்களில் நடைபெறுகிறது. இதில் அழகப்பா கலைக்கல்லூரி தேர்வு மையத்தில் 800 நபர்களும், உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் 800 நபர்களும், அழகப்பா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் 1283 பேர்களும், அழகப்பா மேனேஜ்மெண்ட் கல்லூரியில் 700 நபர்களும், அழகப்பா சையின்ஸ் கேம்பஸ் வளாகத்தில் 500 நபர்களும் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த தேர்வு மையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 575 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காரைக்குடியில் உள்ள பழனியப்பா அரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்வு எழுத வரும் நபர்களிடம் எவ்வாறு சோதனை நடத்துவது என்றும், அவர்களை தேர்வு எழுதுவதற்கு முன்பு எந்த நேரத்தில் உள்ளே அனுப்புவது என்றும், தேர்வு மையத்தில் முறைகேடு செய்பவர்களை எவ்வாறு கண்டறிவது என்றும், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்தால் அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்த அறிவுரைகளை போலீசாருக்கு வழங்கினார்.
இதில் சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, துணை சூப்பிரண்டுகள் பால்பாண்டி(சிவகங்கை), கண்ணன்(மானாமதுரை), வினோஜி(காரைக்குடி), ஆத்மநாபன்(திருப்பத்தூர்), ரமேஷ்(தேவகோட்டை) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டனர்.