ஊட்டி ஆசிரியரை மங்களூரு அழைத்து சென்ற போலீசார்


ஊட்டி ஆசிரியரை மங்களூரு அழைத்து சென்ற போலீசார்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஊட்டி ஆசிரியரை மங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

நீலகிரி

ஊட்டி

குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஊட்டி ஆசிரியரை மங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

குக்கர் குண்டு வெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவரும், ஆட்டோவில் பின் இருக்கையில் பயணம் செய்த பயங்கரவாதியும் படுகாயம் அடைந்தனர். நாச வேலையில் ஈடுபட பயங்கரவாதி வெடி குண்டை எடுத்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாரிக் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஷாரிக் எங்கெல்லாம் சென்றார்?, யார்-யாருடன் பேசினார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊட்டி ஆசிரியர்

இந்த நிலையில் பயங்கரவாதி ஷாரிக், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தசப்பையை சேர்ந்த ஆசிரியர் சுரேந்திரன் என்பவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியது தெரிய வந்தது. சுரேந்திரன் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதையடுத்து நீலகிரியில் இருந்த சுரேந்திரனை போலீசார் விசாரணைக்காக கோவை அழைத்து சென்று கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம், கோவை போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் 60 மணி நேரம் விசாரணை நடத்திபிறகு விடுவித்தனர். அப்போது அவரது செல்போனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வைத்துக்கொண்டு, சுரேந்திரனிடம் வெளியூர் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தனர்.

இதையடுத்து விசாரணைக்காக மங்களூரு போலீஸ் நிலையத்தில் 24-ந் தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரில் இருந்து புறப்பட்ட சுரேந்திரன், கோவை வந்தார். அவரை அங்கிருந்து மங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

குக்கர் வெடிகுண்டை எடுத்து சென்றபோது வெடித்து படுகாயம் அடைந்த ஷாரிக் 40 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்துள்ளார். இதனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே நேற்று விசாரணையின் போது ஷாரிக்கை அடையாளம் காட்டவும், ஷாரிக் கோவையில் சந்தித்த மற்றொரு நபரை அடையாளம் தெரியுமா என்பது உள்பட பல்வேறு கேள்விகள் சுரேந்திரனிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story