குமரியில் போலீசார் பயிற்சி நிறைவு விழா


குமரியில் போலீசார் பயிற்சி நிறைவு விழா
x

நாகர்கோவிலில் நடந்த 2-ம் நிலை போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் நீதிபதிகள், கலெக்டர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடந்த 2-ம் நிலை போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் நீதிபதிகள், கலெக்டர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

பயிற்சி நிறைவுநாள் விழா

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 199 பேருக்கும் 2-ம் நிலை போலீஸ் பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது வந்தது. இதில் பயிற்சி போலீசாருக்கு சட்ட வகுப்புகள் மற்றும் கவாத்து பயிற்சி அளிக்கபட்டன.

இந்த நிலையில் பயிற்சியின் நிறைவு நாள் விழா நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி காலத்தில் சிறந்த முறையில் கவாத்து, சட்ட பயிற்சி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி போலீசாருக்கு தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

போலீசார் அணிவகுப்பு மரியாதை

அப்போது தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் கூறியதாவது:-

பயிற்சி நிறைவடைந்து தற்போது முழு போலீசாக மாறியுள்ள நீங்கள், உங்களது பணிகளில் கண்ணியம் தவறாமல் இருக்க வேண்டும். போலீஸ் பணியில் நேர்மை மிக முக்கியம். நோ்மையாக பணியாற்றினால் போலீஸ் துறையில் உயர்ந்த இடத்தையும், பல சிறப்புகளையும் பெறலாம். பொதுமக்களிடம் அன்புடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் போலீஸ் பணி பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். உங்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட கொடி அங்கீகார சின்னத்தை சீருடையில் அணிந்தபடி பயிற்சி போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனைதொடர்ந்து போலீசாரின் கவாத்து, கராத்தே, களரி, சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வாகனத்தில் கண்காணிப்பு கேமரா...

பின்னர் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட போலீசாரின் ரோந்து வாகனத்தை மாவட்ட நீதிபதி அருள்முருகன் மற்றும் தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் ஆகியோர் பார்வையிட்டதோடு இருசக்கர வாகன ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கண்காணிப்பு கேமராவில் வீடியோவுடன் ஆடியோவும் பதிவாகும் படி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story