காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா


காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா
x

தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி, நவல்பட்டு பயிற்சி பள்ளி உள்பட திருச்சியில் ஒரேநாளில் 3 இடங்களில் காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது. இதில் கூடுதல் டி.ஜி.பி., மத்திய மண்டல ஐ.ஜி., போலீஸ் கமிஷனர் ஆகியோர் பங்கேற்றனர்.

திருச்சி

தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி, நவல்பட்டு பயிற்சி பள்ளி உள்பட திருச்சியில் ஒரேநாளில் 3 இடங்களில் காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது. இதில் கூடுதல் டி.ஜி.பி., மத்திய மண்டல ஐ.ஜி., போலீஸ் கமிஷனர் ஆகியோர் பங்கேற்றனர்.

காவலர் பயிற்சி நிறைவுவிழா

திருச்சி கிராப்பட்டி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு காவல்படை முதலணி கமாண்டன்ட் ஆனந்தன் விழாவை ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த 274 காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "பயிற்சி முடித்த நீங்கள் காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் பேணி காக்கும் வகையில் உங்கள் பணியை அமைத்து கொள்ள வேண்டும். காவல் பணி என்பது பொதுமக்களிடம் கனிவையும், அன்பையும் காட்ட வேண்டும். கயவர்களையும் சமூகவிரோதிகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொதுஅமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணி காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமை" என்றார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயுதப்படை மைதானத்தில்

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் கலந்து கொண்டு, பயிற்சியை முடித்த 198 காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தற்போது பயிற்சி முடித்த காவலர்கள் 198 பேரும் ஒரு மாதகாலம் மாவட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படைகளில் பயிற்சி முடித்த பின்பு, தமிழ்நாடு சிறப்பு காவல்படை பணியில் சேர உள்ளனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முடித்த 426 பெண்கள்

திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள காவல்பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த 426 பெண் காவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் சுகுணா, பிரான்சிஸ்மேரி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிறைவு விழாவில் பயிற்சி முடித்த காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Next Story