கார் மோதி பெண் போலீஸ் கணவர் பலி
நாங்குநேரி அருகே கார் மோதியதில் பெண் போலீஸ் கணவர் பலியானார்.
நாங்குநேரி:
நாங்குநேரியை அடுத்துள்ள பட்டப்பிள்ளைப்புதுரை சேர்ந்தவர் சுப்பையா மகன் லட்சுமணன் (வயது 32). இவர் நாங்குநேரி நான்கு வழிச்சாலையில் மரம் நட்டு பராமரிக்கும் பணியில் ஈட்டு வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் போலீசாக உள்ளார். நேற்று மாலை லட்சுமணன் வேலை முடிந்ததும், வள்ளியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாகைக்குளம் அருகே வந்தபோது, பின்னால் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணனை ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் விபத்தின்போது லட்சுமணனின் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டு முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற காத்தனடைப்பைச் சேர்ந்த விவசாயி பால்வர்ணம் (56) காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.