போலீஸ் எழுத்து தேர்வை 8023 பேர் எழுதுகின்றனர்


போலீஸ் எழுத்து தேர்வை 8023 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

காரைக்குடியில் இன்று நடைபெற உள்ள போலீஸ் எழுத்து தேர்வை 8023 பேர் எழுத உள்ளனர் என சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

காரைக்குடியில் இன்று நடைபெற உள்ள போலீஸ் எழுத்து தேர்வை 8023 பேர் எழுத உள்ளனர் என சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

போலீஸ் எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள கிரேடு 2 போலீசார் சிறை வார்டன், தீயணைப்பு படை வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி, மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

இன்று காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

10 மையங்களில்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:- காரைக்குடி பகுதியில் 10 மையங்களில் எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8023 பேர் கலந்துகொண்டு தேர்வை எழுதுகின்றனர். தேர்வை எழுத வருபவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வரவேண்டும். தமிழ் தகுதி தேர்வில் 80 வினாக்களும், தொடர்ந்து மெயின் தேர்வில் 70 வினாக்களும் என சேர்த்து மொத்தம் 150 வினாக்களுக்கு 2 மணி 40 நிமிடத்திற்குள் பதில் எழுத வேண்டும்.

முன்னதாக காலையில் நடைபெறும் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் மெயின் தேர்விற்கான விடைத்தாள் திருத்தப்படும். தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு தேர்வு அறைக்குள் எவ்வித எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்லக்கூடாது.

கண்காணிப்பு பணி

மேலும், தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 20 பேர் வீதம் ஒரு அறைக்கு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவ்வப்போது அனைத்து தேர்வு அறைகளிலும் திடீர் ஆய்வும் நடத்தப்படும். தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுண் பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story