துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை தாக்கிய வழக்கில் போலீஸ்காரர் கைது


துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை தாக்கிய வழக்கில் போலீஸ்காரர் கைது
x

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை விடுதி அறையில் அடைத்து தாக்கிய வழக்கில் மூளையாக செயல்பட்ட சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தராஜ். துபாயில் வேலை செய்து வந்த இவர், சமீபத்தில் சென்னை திரும்பி வந்தார். துபாயில் இருந்து வரும்போது இவரிடம் அங்குள்ள ஒருவர், 400 கிராம் தங்கத்தை கொடுத்து, அதனை சென்னையில் உள்ள தனது உறவினரான இதயதுல்லா என்பவரிடம் கொடுக்கும்படி கூறியதுடன், அதற்கு கமிஷனாக ஆனந்தராஜியிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்தார்.

ஆனால் சென்னை வந்த ஆனந்தராஜ், 400 கிராம் தங்கத்தை இதயதுல்லாவிடம் கொடுக்காமல் தலைமறைவானார். இதனால் ஆத்திரம் அடைந்த இதயதுல்லா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆர்.கே.பேட்டையில் இருந்த ஆனந்தராஜை கடத்தி வந்து அரும்பாக்கத்தில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து தங்கத்தை கேட்டு அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

இது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயதுல்லா உள்பட 5 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ்காரர் கைது

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 400 கிராம் தங்கம் சென்னையை அடுத்த பரங்கிமலை போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் விமல் என்பவரிடம் இருப்பதாக தெரியவந்தது.

போலீசார், விமலை பிடித்து விசாரித்தபோது அவர், பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருவதும், இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதும் தெரிந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் வினோத் என்பவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. போலீஸ்காரர் விமல் மற்றும் வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story