16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் போக்சோவில் கைது


16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் போக்சோவில் கைது
x

லால்குடி அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

லால்குடி,ஜூலை.27-

லால்குடி அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுமி கர்ப்பம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோரை இழந்த நிலையில் லால்குடி அருகே ஒரு கிராமத்தில் பெரியம்மா அரவணைப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அன்பில் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த சிறுமியை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று 18 வயது என கூறி கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.

திருப்பூர் வாலிபர் மீது புகார்

இதற்கிடையில் வயதில் சந்தேகம் ஏற்படவே லால்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வயதை அதிகமாக கூறி கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. அதன்பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளை கோவில் அருகே ஒரு தனியார் அட்டை கம்பெனியில் பணியில் ஈடுபட்டபோது, ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அதனால் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறினார். சிறுமி கூறிய தகவலின் பேரில் போலீசார் வாலிபரை தேடிவந்தனர்.

இந்தநிலையில், அந்த சிறுமி கூறிய தகவலில் சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமியிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவர், தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், கர்ப்பத்துக்கு அவர்தான் காரணம் என்றும், இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால் தான் வேறு ஒருவரது பெயரை கூறியதாகவும் சிறுமி போலீசில் தெரிவித்தார்.

போக்சோ சட்டத்தில் கைது

அதன்பேரில் போலீசார் பிரகாஷின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை அறிந்த போலீஸ்காரர் பிரகாஷ் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். போலீஸ்காரர் சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story