மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை
x

அறந்தாங்கி அருகே திருமணமான 4 மாதங்களில் போலீஸ்காரர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

போலீஸ்காரர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் கீழ்பாதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி ராணி. இவர்களுடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அபீனா (25). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் தனது மனைவியை வடகாட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார்.

பிரேத பரிசோதனை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அபீனா தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் தமிழ்ச்செல்வனின் அறை கதவை திறந்து பார்த்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் வாயில் நுரை தள்ளியவாறு கிடந்தார். இதையடுத்து அவரை அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

விசாரணையில், தமிழ்ச்செல்வன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் 'தனக்கு வாழ பிடிக்கவில்லை. மன வேதனையுடன் இருப்பதாகவும், தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 4 மாதங்களில் போலீஸ்காரர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story