லோயர்கேம்பில் ஆயுதப்படை போலீஸ்காரர் திடீர் சாவு
லோயர்கேம்பில் ஆயுதப்படை போலீஸ்காரர் திடீரென்று இறந்தார்.
கூடலூர் அருகே லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அழகர்சாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு அஜித்கபூர் (வயது 28), அனில்கபூர் (28) என்ற இரட்டை மகன்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் போலீஸ்காரர்களாக பணியாற்றி வந்தனர். இதில், அனில்கபூர் சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராகவும், அஜித்கபூர் சென்னை ஆவடியில் உள்ள பட்டாலியனில் போலீஸ்காரராகவும் பணியாற்றி வந்தனர்.
அனில்கபூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ விடுப்பில் தனது சொந்த ஊரான லோயர்கேம்பிற்கு வந்தார். அங்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அனில்கபூருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அழகர்சாமி, தனது மகனை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அனில்கபூர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அழகர்சாமி கொடுத்த புகாரின்பேரில் லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.