ஆவடி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆவடி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆவடி அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி,

சென்னை ஆவடி அடுத்த கோயில்பதாகை இந்திரா காந்தி நகரில் உள்ள கிருபா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 39). இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி (30) என்ற மனைவியும், ரசிகா (10) என்ற மகளும், ரஷன் (6) என்ற மகனும் உள்ளனர். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 7 வருடங்களாக குடும்பத்துடன் இப்பகுதியில் வசித்து வந்த திருநாவுக்கரசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு திருநாவுக் கரசின் மனைவி கலைச்செல்வி குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

தூக்கில் தொங்கினார்

இதனால் மனமுடைந்து காணப்பட்ட திருநாவுக்கரசு மனைவியும், குழந்தையும் பிரிந்து சென்ற சோகத்தில் நேற்று முன்தினம் மாலை தனது சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறியடித்து கொண்டு அவர், திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் படுக்கையறையில் உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, திருநாவுக்கரசு படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் திருநாவுக்கரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது வேறு எதுவும் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜோதிகுமார் (47). தச்சு தொழிலாளியான இவர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டநிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை புரசைவாக்கம் சதாசிவம் தெருவை சேர்ந்த கோபிநாத் (28) என்பவர் மனைவியை பிரிந்த சோகத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story