32 அனாதை பிணங்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்த போலீஸ்காரர்கள்


32 அனாதை பிணங்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்த போலீஸ்காரர்கள்
x

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனாதையாக கிடந்த 32 பிணங்களை, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர், எடுத்துச்சென்று ஒரே இடத்தில் உரிய சம்பிரதாய சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறையில் அடையாளம் தெரியாத சடலங்கள், பெயர் தெரிந்த சடலங்கள் என 32 பிணங்கள் கடந்த சில மாதங்களாக உள்ளன. இதில் 6 பெண்கள் உடல்களும், 2 குழந்தைகள் உடல்களும், 24 ஆண்கள் உடல்களும் அடங்கும். இதில் 15 உடல்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்டவை. தஞ்சை மேற்கு போலீஸ் நிலைய பகுதியில் 4 உடல்களும், தஞ்சை தாலுகா போலீஸ் நிலைய பகுதியில் 3 உடல்களும், தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய பகுதியில் 2 உடல்களும், ஒரத்தநாடு, புதுக்கோட்டை போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த உடல்களும் அடங்கும்.

உரிமை கோரவில்லை

இந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோராவிட்டால் 1 வாரத்தில் அடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் உரிமம் கோரவில்லை. இதையடுத்து 32 உடல்களையும் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், போலீஸ்ஏட்டு ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து அனாதையாக இருந்த 32 உடல்களையும் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி சாந்திவனம் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

ஒரே இடத்தில் அடக்கம்

அங்கு பொக்லின் எந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு அதில் 32 உடல்களும் அடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. அங்கு இறந்தவர்களுக்கு, என்னென்ன சடங்கு, சம்பிரதாயங்கள் செய்யப்படுமோ? அது செய்யப்பட்டு அந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் கூறுகையில், நான் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த 3 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை நானும், போலீஸ் ஏட்டு ரகுநாதனும் எங்களது செலவில் அடக்கம் செய்துள்ளோம்.

தற்போது எங்களுடன் மன்னார்குடியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனமும் இணைந்து அடக்கம் செய்வதற்கு உதவி செய்துள்ளது. தற்போது ரகுநாதனும் வேறு போலீஸ் நிலையத்திற்கு மாறுதல் ஆகி சென்று விட்டார். இறந்தவர்களுக்கு யாரும் இல்லாததால்நாங்கள் இதனை ஒரு சேவையாக கருதி செய்து வருகிறோம் "என்றார்.


Next Story