வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கயத்தாறு
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் வெண்கல உருவ சிலைக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பிச்சையா, கிராம நிர்வாக உதவி அலுவலர் அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாஞ்சாலங்குறிச்சி
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோட்டையில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி தலைமையில் மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மண்டல துணை தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசு வீரசக்கம்மாள், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி தலைமையில் வீரசக்கதேவி ஆலய குழு செயலாளர் செந்தில், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர், துணைத் தலைவர்கள் முருகேசன், வேல்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மணியாச்சி துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன.
அ.தி.மு.க.
கயத்தாறில் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் முழு உருவ வெண்கல சிலைக்கு, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், மாநில துணைத் தலைவர் மல்லுச்சாமி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜனதா- அ.ம.மு.க.
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பு சாரா துணைத் தலைவர் லயன் மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் பொன்ராஜ், மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவபெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன், செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி, ஆத்திகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்பையா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
சிங்கிலிப்பட்டி
விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பஸ்நிலையம் அருகே கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி, பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முள்ளக்காடு
தூத்துக்குடி மாவட்ட ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில் நடைபெற்றது. விழாவிற்கு உச்சினி மாகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா ரகுபதி சின்னராஜ் தலைமை தாங்கினார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு தலைவர் முருகபூபதி, மாவட்ட ஊமைத்துரை தொண்டர் படை கவுரவ தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி நிர்வாகி வேல்துரை வரவேற்றார். விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில துணைத்தலைவர் ஜெயராஜ் பண்பாட்டுக் கழக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராமலிங்கம், பாலையா நாயக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்- வாகைகுளம் மெயின் ரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் பண்பாட்டுக் கழக கட்டாலங்குளம் கிளை தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட நாம் இந்தியர் கட்சி செயலாளர் கருப்பசாமி வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.