சேலத்தில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி


பெரியார் நினைவு தினத்தையொட்டி சேலத்தில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சேலம்

தி.மு.க.வினர் அஞ்சலி

சேலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரியார் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது பெரியாரை வாழ்த்தி கோஷமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கார்த்திகேயன், அவை தலைவர் சுபாசு, மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க., பா.ம.க.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அருள் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், பசுமை தாயகம் மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்புக்கரசு, துணை செயலாளர்கள், ராஜமாணிக்கம், சுமன், செல்வம், இளைஞரணி செயலாளர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள்

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story