அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டை கைது செய்யக்கோரி, நெல்லையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டை கைது செய்யக்கோரி, நெல்லையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பற்களை பிடுங்கிய விவகாரம்
அம்பை போலீஸ் சரகத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.இதற்காக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் இன்று (திங்கட்கிழமை) ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங்கிற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், நிர்வாகிகள் யாசிர் அலி, திலிபன், கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திராவிடர் தமிழர் கட்சி திருக்குமரன், இந்திய கம்யூனிஸ்டு நெல்லை மண்டல நிர்வாகி கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இதுதொடர்பாக பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.