இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
நெல்லையில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லையில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவு தினம்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு இமானுவேல் சேகரன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நெல்லை மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், வக்கீல் மரியகுழந்தை, மாவட்ட துணை தலைவர் வண்ணை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க
அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சிவந்தி மகராஜன், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.ம.மு.க
பாளையங்கோட்டை மகாராஜநகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, நகர செயலாளர் மோகன், தொண்டர் அணி தலைவர் மகாராஜா பாண்டியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.