இலவசங்களை கொடுத்து அரசியல் கட்சியினர் ஓட்டு வாங்க நினைக்க கூடாது
அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்க கூடாது என்று வேலூரில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கூறினார்.
சமுதாய சமர்ப்பண தினம்
வேலூர் மாநகர் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண தினம் நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடைபெற்றது. வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் பாஸ்கரன், சீனிவாசன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி முதல் தலைவர் தாணுலிங்க நாடார், ராமகோபாலன், வெள்ளையன் ஆகியோரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின்னர் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில் நிலங்களை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டில் பல்வேறு நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்கி உள்ளனர். மேலும் அரசியல் கட்சியினரை அறங்காவலர்களாக நியமிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு இதனை கடைப்பிடிக்காமல் அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கிறது.
இலவசங்களை கொடுத்து...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணமும், இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிப்பது ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது. அரசியல் கட்சியினர் மக்களுக்கு நன்மை செய்து ஓட்டுப்பெற வேண்டும். அதைத்தவிர்த்து பணம், இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்க நினைக்க கூடாது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சியினர் தான் மாற வேண்டும்.
ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. அங்கு தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் நடத்த வேண்டும். தமிழகத்தில் மதப்பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். பிறமதங்களை இழிவுபடுத்தும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் வருமானத்தை பக்தர்களின் வசதிக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவிலை பின்பற்றி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். கோவில் வருமானத்தின் மூலம் சிதிலடைந்து காணப்படும் பழைய கோவில்களை சீரமைக்க வேண்டும். சோழவரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நந்திகம்பீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.